மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவரது மகன் ஹன்ட்டர் பைடனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார்.
மகன் ஹன்ட்டர், துப்பாக்கியை வாங்கும்போது பொய் சொன்னதாக வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அவர் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. வரிகள் செலுத்தத் தவறிய குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பதவி விலகவிருக்கும் பைடன், மகனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று இதற்கு முன்னர் கூறிவந்தார்.
எதிர்வரும் 12ஆம் திகதி, துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகளின் தொடர்பில் ஹன்ட்டருக்குத் தீர்ப்பளிக்கப்படவிருந்தது.
ஹன்ட்டர் தமது மகன் என்பதால் குறிவைக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் பைடன் கூறியிருந்தார்.
நீதியின் மீது தமக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறிய பைடன், பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அதிகம் யோசித்ததாக கூறினார்.
கடந்த வார இறுதியில் தாம் எடுத்த முடிவைத் தள்ளிப்போடுவதில் அர்த்தமில்லை என்று தோன்றியதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு தந்தையாகவும் ஜனாதிபதியாகவும் தாம் எடுத்த முடிவை அமெரிக்கர்கள் புரிந்துகொள்வர் என்று நம்புவதாக பைடன் அறிக்கையில் குறிப்பிட்டார்.