குறைந்த விலை மதுபானம் தயாரிப்புக்கு கடும் எதிர்ப்பு
குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் கொண்டு வந்த யோசனை தொடர்பாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன், கலால் திணைக்களத்தின் கடமைகள் என்ன? என்பது பற்றியும் புதிய மதுபான தயாரிப்பு யோனைக்கு எதிராகவும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத மதுபானத்தை குறைப்பேன் என்ற போர்வையில் மதுவின் விலையை குறைத்து நாட்டு மக்களின் மது பாவனையை அதிகரித்து நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, ஒரு நாடு மதுபானம் மற்றும் சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அதன் மீதான வரியை உயர்த்த வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மது அருந்துபவர்கள் உட்கொள்ளும் மதுவின் அளவைக் குறைப்பதற்கும் புதிதாக மது பயன்பாட்டுக்கு செல்வதைக் கட்டுப்படுத்தவும் மது வரிகளை அதிகரிப்பதுதான் ஒரு பயனுள்ள உத்தி என்பதை உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட இது தொடர்பாக ஆய்வு நடத்தும் நிறுவனங்கள் அறிவியல் பூர்வமாக உறுதி செய்துள்ளது.
உலகளவில் தடுக்கக்கூடிய 10 இல் 08 இறப்புகளுக்கு காரணமான தொற்று அல்லாத நோய்களுக்கான பிரதான பங்களிப்பில் 04இல் 01 பங்கு மது அருந்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இலங்கையில் மது பாவனையால் நாளொன்றுக்கு 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடத்துக்கு சுமார் 20,000 பேர் நாட்டில் உயிரிழப்பதாகவும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மதுபான பாவனையால் நாட்டு மக்களை நோயுறச் செய்வதல்ல, மதுபான வரியை சரியாக வசூலித்து சட்டவிரோத மதுபான பாவனையை தடுப்பதே கலால் ஆணையாளர் நாயகம் மற்றும் அவர் சார்ந்த திணைக்களத்தின் பொறுப்பாகும்.
சந்தையில் கலால் வரி செலுத்தாமல் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை கண்டறிந்து, தொடர்புடைய மோசடி வர்த்தகர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுப்பதும் கலால் ஆணையாளர் நாயகத்தின் பொறுப்பாகும் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.