இலங்கை: 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல குழப்பத்தின் காரணமாக இன்று (10ஆம் திகதி) முதல் அடுத்த சில நாட்களில் தீவின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 12 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் ஹங்வெல்ல பகுதியில் 141.5 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் வொகன் தோட்டத்தில் 105.5 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, நுவரெலியா, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.