ஒரே மைதானத்தில் 1000 ரன்கள்.. வார்னர் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரே மைதானத்தில் 1000 ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரின் ரிக்கார்டை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 9-ஆவது போட்டியாக மும்பை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான மேட்ச் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த மேட்சில் சுப்மன் கில் 27 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரியுடன் 38 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இந்த போட்டியில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அகமதாபாத் மைதானத்தில் மட்டும் 1000 ரன்கள் கடந்தார். அகமதாபாத் மைதானத்தில் மொத்தம் 19 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 1000 ரன்களை கடந்து டேவிட் வார்னர் ரிக்கார்டை முறியடித்துள்ளார்.
ஒரே மைதானத்தில் ஆயிரம் ரன்களை அதிவேகமாக குவித்தவர்கள் பட்டியலில் பெங்களூரு மைதானத்தில் கிறிஸ் கெய்ல் 19 இன்னிங்ஸ்களில் எடுத்திருந்தார். இதற்கு அடுத்ததாக சுப்மன் கில் அகமதாபாத் மைதானத்தில் 20 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எடுத்துள்ளார். ஹைதராபாத் மைதானத்தில் டேவிட் வார்னர் 22 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்து 3 ஆவது இடத்தில் உள்ளார்.