இரகசிய அணுவாயுத சோதனை – ட்ரம்பின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சீனா!
ரஷ்யாவும், சீனாவும் இரகசியமாக நிலத்திற்கு கீழ் அணுவாயுதங்களை சோதனை செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை சீனா மறுத்துள்ளது.
இது தொடர்பில் பெய்ஜிங்கில் நடந்த வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் பேசிய செய்தி தொடர்பாளர் மாவோ நிங், ட்ரம்பின் கூற்றுக்களை மறுத்துள்ளார்.
“பொறுப்பான அணு ஆயுத நாடாக, சீனா எப்போதும் தற்காப்பு அணுசக்தி மூலோபாயத்தை நிலைநிறுத்தி செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சீனா அமைதியான வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது, அணு ஆயுதங்களை ‘முதலில் பயன்படுத்துவதில்லை’ என்ற கொள்கையையும், தற்காப்பில் கவனம் செலுத்தும் அணுசக்தி மூலோபாயத்தையும் பின்பற்றுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதப் பரவல் தடை ஆட்சியைப் பாதுகாக்கவும், உலகளாவிய மூலோபாய சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று சீனா நம்புகிறது எனவும் தெரிவித்துள்ளார்.





