பயன்படுத்திய ஐபோன் வாங்கும் திட்டமா? உங்களுக்கான பதிவு

ஸ்மார்ட்போன்கள் இன்று நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. ஒருவரை தொடர்பு கொள்ளுதல் முதல் வங்கிச் சேவைகள், ஷாஃப்பிங், விமான டிக்கெட் முன்பதிவு போன்ற பல வேலைகளில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றின், முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, நீடித்து உழைக்கும் ஸ்மார்ட்போனில் முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமானது.
பல ஆண்டுகளாக, நீடித்து உழைக்கும் தன்மை, பயன்பாட்டின் எளிமை மற்றும் தனியுரிமை கவனம் காரணமாக, ஐபோன்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனால் பலர், புதிதாக ஐபோன் வாங்குவதற்குப் பதிலாக, செகண்ட் ஹேண்ட் ஐபோன் வாங்குவது சேமிப்பு மற்றும் புத்திசாலித்தன்மை கொண்ட விருப்பமாக பார்க்கின்றனர்.
பல காரணங்களுக்காக பயன்படுத்திய ஐபோன்கள் (Pre-owned iPhones) தற்போது அதிக தேவை பெற்றுள்ளன. சிலருக்கு பழைய மாடல்களின் நச் வடிவமைப்பு (compact form factor) பிடிக்கிறது (அ) ஹெட்போன் ஜாக் போன்ற வசதிகள் தேவையாக இருக்கலாம். புதிதாக வாங்கும் ஐபோனின் அதிக விலையை தவிர்க்க செகெண்ட் ஹேண்ட் ஐபோனை சிலர் தேர்ந்தெடுக்கிறார்கள்.
புதுப்பிக்கப்பட்ட (அ) கொஞ்ச காலம் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஐபோன்கள் சிறந்த கேமரா தரம், பாதுகாப்பு மற்றும் வேகத்தை வழங்கும் திறன் கொண்டவையாக இருக்கலாம். CCS Insight எனும் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி, புதுப்பிக்கப்பட்ட (refurbished) மொபைல் போன், புதிய போனுடன் ஒப்பிடும்போது 15% முதல் 50% வரை குறைந்த விலையில் கிடைக்கக் கூடும். அதே நேரத்தில், பல போன்கள் வாரண்டி, financing திட்டங்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் உடன் வருகின்றன. இந்த செகண்ட் ஹேண்ட் மொபைல் போன்களில் நாம் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன எனப் பார்ப்போமா?
செகண்ட் ஹேண்ட் ஐபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்:
1.செகண்ட் ஹேண்ட் மொபைல் சந்தையில் ஆதிக்க செலுத்தும் ஐபோன்கள்: CCS Insight நிறுவனத்தின் தகவலின்படி, உலகளாவிய செகண்ட் ஹேண்ட் மொபைல் சந்தையில் ஐபோன்கள் மட்டும் 60% க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சாம்சங் ஆண்ட்ராய்டு போன்கள் சுமார் 17% பங்கு கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
2. நம்பகமான விற்பனையாளர்களைத் தேர்வு செய்யுங்கள்: இணையத்தில் கவர்ச்சிகரமான சலுகைகள் அதிகமாக உள்ளன. ஆனால், அதேபோல் மோசடிகளும் அதிகம். எனவே, Amazon, BestBuy போன்ற நம்பகமான இணையதளங்கள் (அ) அதற்கு என உள்ள ஆப்களில் மூலமாகவே வாங்குவது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். வாடிக்கையாளர் விமர்சனங்களை கவனமாக படிக்கவும், திரும்பப்பெறும் கொள்கையை (return policy) சரிபார்க்கவும், அதிகம் கவர்ச்சியாகத் தெரியும் விலைகள் எப்போதும் நம்பத்தகுந்தவை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
3. பேட்டரி செக்கப் அவசியம்: புதுப்பிக்கப்பட்ட (refurbished) ஃபோன்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட பேட்டரி உடன் வருகின்றன. ஆனால், ஆப்பிள் சான்றளிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட ஐபோன்கள் புதிய பேட்டரி, புதிய சார்ஜிங் கேபிள் மற்றும் 1 வருட வாரண்டியுடன் வழங்கப்படுகின்றன. மற்ற விற்பனையாளர்களுக்கு, பேட்டரி மாற்றம் அவர்களது கொள்கைகளின் அடிப்படையில் அமையும். எனவே, வாங்குவதற்கு முன் பேட்டரி நிலையும், பேட்டரி மாற்றப்பட்டதா இல்லையா என்பதை தெளிவாகக் கண்டறிவது முக்கியம்.
4. பயன்படுத்திய ஃபோன்களின் தரத்தை சோதிக்க வேண்டும்: பயன்படுத்தப்பட்ட போனை மதிப்பிடுவதற்கு பல முறைகள் உள்ளன. பெரும்பாலான விற்பனை தளங்கள் தங்களுக்கு என ஒரு தர நிர்ணய முறையை வைத்திருக்கிறார்கள். போனின் பாகங்களின் நிலை மற்றும் எந்த அளவு தேய்மானத்தை எதிர்பார்க்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள அதை கவனமாகப் படியுங்கள்.
5. பழைய ஐபோன்களை தவிர்க்கவும்: 3 generations பழைய ஐபோனைத் தேர்வு செய்வது சிறந்தது. 5 (அ) 6 தலைமுறைகளுக்கும் மேலான பழைய மாடல்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் அவற்றில் புதிய iOS updates-ஐ பெற வாய்ப்பு குறைவாக இருக்கலாம் (அ) முழுமையாக ஆதரிக்கப்படாமல் போகலாம்.
6. தண்ணீர் சேதத்தைச் சரிபார்க்கவும்: ஐபோன்களில் தண்ணீர் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை காண, Liquid Contact Indicator (LCI) எனப்படும் பகுதியைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இது பொதுவாக SIM card tray-இன் உள்ளே காணப்படும் மற்றும் தண்ணீர் தொடர்பு ஏற்பட்டால் சிவப்பாக (red) மாறும். LCI-யை தெளிவாக பார்க்க டார்ச்சை பயன்படுத்தவும். அது வெள்ளை அல்லது வெண்கல நிறத்தில் (white/silver) இருந்தால், அந்த iPhone-க்கு தண்ணீர் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு குறைவாகும்.
சரியான ஆய்வும், பேட்டரி ஆயுள், மாடல் மற்றும் நீர்சேதம் போன்ற முக்கிய விவரங்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலமும், நீங்கள் குறைந்த விலையில் உயர்தர ஐபோன்களைப் பெற முடியும்.