டெல்லியில் தேடுதல் வேட்டை – 285 பேர் கைது
இந்தியாவின் டெல்லியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், டெல்லி பொலிஸார் ‘ஆகாத்’ நடவடிக்கை என்ற பெயரில் நேற்று இரவு விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு டெல்லி பொலிஸாரால் ‘ஆகாத் 3.0’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் இலக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது, ஆயுதச் சட்டம் மற்றும் மதுவரி சட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்படக்கூடிய குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 504 பேர்
கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.





