பணிப்பெண்ணாக வெளிநாடு செல்லும் தாய்மார்களுக்கு புதிய நிபந்தனைகள்
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் பிள்ளைகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 2 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக மாற்றியமைக்கப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
05 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட எத்தனை தாய்மார்கள் இதுவரை வெளிநாடு சென்றுள்ளனர் என்பதை கண்டறிய பிரதேச செயலக மட்டத்தில் தரவுகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களிலும் சிசிடிவி கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் கமராக்கள் பொருத்தப்படுவதன் மூலம் அதனை ஓரளவு குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களுக்கு வழங்கப்படும் வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கமராக்கள் பொருத்துவது உரிம நிபந்தனையாக உள்ளடக்குவது தொடர்பான யோசனை பொறுப்பு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.