1250 அடி உயர எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் மீது ஏறி இசைக்கலைஞர் புதிய சாதனை
அமெரிக்காவிலுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் ஒற்றை நபராய் ஏறி சாதனை படைத்திருக்கிறார் ஜேரட் லெட்டோ என்னும் இசைக்கலைஞர். சட்ட அனுமதியுடன் ஏறிய முதல் நபர் என்ற வகையிலும் இவர் பெருமை பெற்றிருக்கிறார்.
நடிகர், இசைக்கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர் ஜேரட் லெட்டோ. ’தர்ட்டி செகண்ட்ஸ் டு மார்ஸ்’ என்னும் இசைக்குழுவின் அங்கத்தினரான இவர், அடுத்த மார்ச்சில் திட்டமிட்டுள்ள தங்களது இசை உலகப்பயணத்தை விளம்பரப்படுத்தும் வகையில் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் ஏறியிருக்கிறார்.
நியூயார்க் நகரிலுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம், 102 மாடிகள், 1250 அடி உயரம் கொண்டது. 51 வயதாகும் ஜேரட், எம்பயர் ஸ்டேட் கட்டத்தில் ஏறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார். அதற்கான சட்டபூர்வ அனுமதியையும் பெற்றுவிட்டார். அதன் பின்னர்தான் அத்தனை உயர கட்டத்தில் ஏறுவது தான் நினைத்ததை விட கடினமானது என்பதை உணர்ந்தார்.
“நான் நினைத்ததை விட இந்த சவால் மிகவும் கடினமாக இருந்தது. மிகுந்த உடலுறுதியும், மன உறுதியும் இதற்கு தேவைப்பட்டன. கட்டடத்தில் ஏறி முடிக்கும் வரை இந்த சாதனையை நான் செய்து முடிப்பேன் என்று என்னால் நம்ப முடியாதிருந்தது. எனினும், ஏறி முடித்த பிறகு புதிதாய் பிறந்ததாய் உணர்ந்தேன்” என்று ஜேரட் தெரிவித்திருந்தார்.
ஜேரட்டின் இசைக் குழு, தனது இசைப் பயணத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி பல்வேறு நாடுகளில் வலம் வந்து செப்டம்பரில் அதனை நிறை செய்ய உள்ளது.