இலங்கையர்களை வீதிக்கு அழைத்துள்ள எம்.ஏ.சுமந்திரன் MP..
இலங்கை அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மக்கள் அங்கிருந்து பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். “தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளை மீறியும் மக்கள் ஒன்று திரளத் தயாராக இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்கள் மூலம் தனிநபர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துவது மிகவும் அவசியமானது.
இந்த அரசாங்கம் மக்களை மண்டியிட வைத்துள்ளதால், மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.
தற்போதைய விவகாரங்கள் நம்மை மேலும் நிர்பந்திக்கக்கூடும். அதனால் சட்டத்தை மீறியதாக இருந்தாலும், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தங்கள் குறைகளை கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.