Site icon Tamil News

யாழ்ப்பாணம் புத்தூர் தாக்குதல் சம்பவம்!!! 25 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் கைது

தமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமான சித்தரித்தது சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் என கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து , இரு இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நாடாத்தி, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 25 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தூர் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெண்களின் படங்களை கணனி வரைகலை (கிராஃபிக்ஸ்) மூலம் ஆபாச படங்களாக மாற்றம் செய்து, அதனை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரவர்கள் இணைந்து முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு ஊரில் உள்ள இரு இளைஞர்களே அவ்வாறு பெண்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர் என குற்றம் சாட்டி , அந்த இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அத்துடன் வீட்டினுள் இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து உடைத்தும் , வீட்டின் முன் நின்ற வாகனங்களை அடித்து உடைத்து , அவற்றுக்கு தீ வைத்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார் தாக்குதலில் காயமடைந்த இளைஞர்களை அங்கிருந்து மீட்டு , வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயன்ற போது , பொலிஸாருடன் முரண் பட்டு , பொலிஸார் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அதில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் , நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதனை அடுத்து அங்கு கூடியிருந்த ஊரவர்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி விட்டு , காயமடைந்த இரு இளைஞர்கள் மற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை 25 பெண்கள் உள்ளிட்ட 31 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Exit mobile version