ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணைகள் வழங்கவில்லை: அதிபர் மசூத் பெஸெஷ்கியன்
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு தமது அரசாங்கம் ஒலியை விஞ்சும் வேகத்தில் செல்லக்கூடிய ஏவுகணைகளை வழங்கவில்லை என்று ஈரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியன் கூறியுள்ளார்.திங்கட்கிழமை (செப்டம்பர் 16) இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார்.
ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி குழு, இஸ்ரேல் மீது ஒலியை விஞ்சும் வேகம்கொண்ட ஏவுகணையைப் பாய்ச்சியதாகக் கூறிய மறுநாள் ஈரானிய அதிபரின் அறிவிப்பு வெளியானது.
ஏமனின் வடபகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி குழு இதற்கு ‘கடுமையான விலை’ கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு எச்சரித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் மத்திய பகுதிக்குள் அவர்கள் ஏவுகணையைக் கொண்டுசென்றதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் அவ்வாறு கூறினார்.
இதுகுறித்துக் கருத்துரைத்த ஈரானிய அதிபர் பெஸேஷ்கியன், “ஈரானிலிருந்து ஒருவர் ஏமன் செல்வதற்கு ஒரு வாரம் பிடிக்கும். அப்படியிருக்க இந்த ஏவுகணை எப்படி அங்குச் சென்றிருக்கும்? ஏமனுக்கு வழங்குவதற்கு அத்தகைய ஏவுகணைகள் எங்களிடம் இல்லை,” என்றார்.
இருப்பினும், ஈரான் சென்ற ஆண்டு உள்நாட்டில் முதல்முறையாகத் தயாரிக்கப்பட்ட, ஒலியை விஞ்சும் வேகத்தில் செல்லக்கூடிய ஏவுகணையை நிகழ்ச்சி ஒன்றில் காட்சிப்படுத்தியது. ‘ஃபட்டா’ எனும் அந்த ஏவுகணையின் படங்களை அந்நாட்டு அரசாங்க ஊடகம் வெளியிட்டது.