அபுதாபியில் இந்தியப் பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா நகரைச் சேர்ந்த ஷாஷாதி கான் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றி வந்துள்ளார் எனவும், இதன்போது தனது பராமரிப்பில் இருந்த 4 வயதுக் குழந்தைக்கு அவர் தடுப்பூசி செலுத்தியுள்ளார் எனவும், அப்போது துரதிஷ்டவசமாக அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தினையடுத்து அப்பெண் அபுதாபி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் , வழக்கை விசாரித்த நீதிமன்றம் , கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மரண தண்டனையைத் தடுத்து நிறுத்துமாறு வெளியுறவுத்துறையிடம் பல முறை மனு கொடுத்த ஷாஷாதி கானின் தந்தை, டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த மாதம் 15-ஆம் திகதி, ஷாஷாதி கானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.