இந்தியா – ராணுவ ரகசியங்கள் கசிவு; பஞ்சாப்பில் இருவர் கைது

பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ராணுவ ரகசியங்கள் கசியவிட்ட இருவரை பஞ்சாப் காவல்துறை கைது செய்தது.பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்தனர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் இந்திய அரசு முறித்துக் கொண்டது.இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை பஞ்சாப் காவல்துறை கைது செய்தது.
இது குறித்து விளக்கமளித்த பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ், ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கசிய விட்ட பாலக் ஷெர் மாசிஹ், சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை அமிர்தசரஸ் காவல்துறையினர் கைது செய்தனர். இருவரும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்று கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில், தற்போது அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங் மூலம் ஏற்படுத்தப்பட்ட பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பாட்டாளர்களுடனான தொடர்பில் இவர்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“விசாரணைக்குப் பிறகு முழு விவரம் தெரியும். தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பஞ்சாப் காவல்துறையினர் முழு வீச்சில் பணியாற்றுகின்றனர். நமது ஆயுதப் படைகளின் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று டிஜபி கவுரவ் யாதவ் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம், இந்திய ராணுவத்தினரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (மே 4) இரவிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு கடந்த 10 நாள்களாக இரவில் பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தும் வேளையில் இந்திய ராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது