இலங்கையில் ஏழாவது மனித புதைகுழியைச் சுற்றியுள்ள பகுதியை ‘GPR ஸ்கேன் செய்ய’ நீதிமன்றம் உத்தரவு

போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் மேலும் மனித எச்சங்கள் உள்ளனவா? என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றம் குறித்த பிரதேசத்தை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (ஓகஸ்ட் 26) மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.எம். நஸ்லீம், அந்த இடத்தில் தரை ஊடுருவும் ரேடார் (GPR) பரிசோதனைக்கான உத்தேச பாதீடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்களம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரின் கையொப்பமிடப்பட்ட உத்தேச பாதீடு ஒன்று இன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை தொல்லியல் திணைக்களத்திடம் காணப்படும் GPR ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக ஸ்கேன் செய்வதற்காக குறித்த பாதீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.”
மாகாண மேல் நீதிமன்றம் முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
“குறித்த உத்தேச பாதீடானது மூதூர் நீதிமன்ற கட்டளையுடன் மாகாண மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி கிடைத்ததும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.”
இந்த வழக்கு செப்டெம்பர் 2, 2025 அன்று மீண்டும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசம் அரச காணி எனவும், அங்கு முன்னர் ஒரு மயானம் இருந்தமைக்கான எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் மூதூர் பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கூட்டாக ஓகஸ்ட் 6 மூதூர் நீதவான் எச்.எம். தஸ்னீம் பௌசானிடம் தெரிவித்தனர்.
சம்பூர் கடற்கரையில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட மூன்று பேரின் மரணங்கள் இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை என தீர்மானிப்பது கடினம் என சட்ட வைத்திய அதிகாரி நிர்மால் பொறுக்கம நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.
அவர்களின் வயது குறித்தும் அறிக்கையில் தெரிவித்திருந்த அவர், அவர்களில் இருவரின் எலும்புகள் ஒன்றாகக் காணப்பட்டதால், இயற்கையான காரணங்களால்தான் மரணங்கள் நிகழ்ந்தனவா என்பதை தீர்மானிப்பது கடினம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகழ்வை நடத்திய பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மெக் (MAG) நிறுவனம் ஜூலை 20ஆம் திகதி ஒரு மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளைக் கண்டுபிடித்தது.
57 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரியூட்டியும் கொலை செய்யப்பட்ட, இலங்கை இராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்படும், ஜூலை 7, 1990 சம்பூர் படுகொலையின் நினைவாக பாதிக்கப்பட்ட கிராம மக்களால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.