பெசிலுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பெற முயற்சி
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி பெசில் ராஜபக்ஷவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், முக்கிய அதிகாரிகள் போன்றோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
பெசில் ராஜபக்ஷவின் சொத்துக்கள், சேமிப்புகள், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சர்வதேச பிடியாணை பெறக்கூடிய வகையில் மிக விரைவில் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுப்பதற்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் சட்டமா அதிபருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயம் குறித்து முக்கியமாக கேட்டறிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.