மீண்டும் ஒரு சுகாதார நெருக்கடி – 61 நாடுகளில் பரவி வரும் நோய் தொற்று!
மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட பொதுவான பூஞ்சையான கேண்டிடா ஆரிஸ் (Candida auris), உலகம் முழுவதும் வீரியம் பெற்று பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 6.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் பூஞ்சை தொற்றுகளால் 50 சதவீதமானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேண்டிடா ஆரிஸ் (Candida auris), என்பது ஒரு வகை ஊடுருவும் பூஞ்சை தொற்று ஆகும். குறிப்பாக பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு ஆபத்தான தொற்றுகளை ஏற்படுத்தும்.
இது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு ஜப்பானில் ஒரு நோயாளியின் காதுக் குழாயில் கண்டுபிடிக்கப்பட்டது, விரைவில் இந்தியா உட்பட பல நாடுகளுக்குப் பரவியதுடன், 2014 ஆம் ஆண்டில் ஒரு பெரிய பொது சுகாதார அச்சுறுத்தலுக்கு வித்திட்டது.
சமீபத்திய ஆராய்ச்சி மதிப்பாய்வு பூஞ்சையின் பல தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்துகிறது, அவை விரைவாகப் பரவ உதவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆறு கண்டங்களில் குறைந்தது 61 நாடுகளில் தற்போது பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த பூஞ்சை தொற்றானது ஒன்றாக ஒட்டிக்கொண்டு மேற்பரப்புகளில் சளி போன்ற பயோஃபிலிம் அடுக்குகளை உருவாக்குகிறது. இதனால் மருந்துகள் ஊடுருவுவது கடினம். ஆகவே எதிர்ப்பு மருந்துகளுக்கு பலனளிக்காது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





