அமெரிக்காவில் தண்ணீரை குடித்ததால் உயிரிழந்த பெண்
அமெரிக்காவில் அதிக தண்ணீரை குடித்த ஒரு பெண் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
வெயிலின் தாக்கம் தாங்காமல் அந்த பெண் அதிகளவில் நீர் பருகியுள்ளார்.
அமெரிக்க நாட்டின் இந்தியானா மாகாணத்தில் ஆஷ்லே சம்மர் எனும் ஒரு 35 வயது இளம்பெண் கடந்த ஜூலை மாதத்தில் தன் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் இந்தியானா மாகாணத்தின் லேக் ப்ரீமேன் எனும் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கே வெயிலின் தாக்கம் தாங்காமல் அவர் அதிகளவு தண்ணீரை குடித்துள்ளார்.
அதாவது, 20 நிமிடங்களுக்குள் 1.5 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். இதனால் தலை சுற்றி அவர் மயங்கி விழுந்த நிலையில் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஹைப்போநெட்ரேமியா (hyponatremia) எனும் சோடியம் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.
அவருக்கு உடனே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் கூட எந்த பலனும் இல்லாமல் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.