மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோரை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று (26.08) சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் ஜூலி சங் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் இட்டுள்ள பதிவில், இந்த கலந்துரையாடலில் சமய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் மதத் தலைவர்களின் முக்கிய பங்கு குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க மடு மாதா ஆலயத்திற்கு சென்றேன் எனவும், இந்த புனித இடத்திற்கு என்னை வரவேற்றதற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல நூற்றாண்டுகள் மற்றும் மன்னாரில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் என்று மடு மாதா ஆலயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜுலி சங், மன்னார் ஆயரை மன்னார் ஆயர் இல்லத்திலும் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகர் எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் ஆகியோரை மடு திருத்தலத்திலும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.