1,900 பேரை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்! அதிர்ச்சியில் ஊழியர்கள்
மைக்ரோசாப்ட் இந்த வாரம் ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸில் பணியாற்றும் சுமார் 1,900 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி பில் ஸ்பென்சர் இதனை உறுதி செய்துள்ளார் என கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப நிறுவனம் இப்போது முதன்மையாக ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட் பணியாளர்களை அதிகளவில் நீக்குகிறது என்றாலும், சில எக்ஸ்பாக்ஸ் மற்றும் ஜெனிமேக்ஸ் ஊழியர்களும் இந்த பணிநீக்கத்தில் பாதிக்கப்படுவார்கள். மொத்தத்தில் 22,000 பணியாளர்களைக் கொண்ட மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் சுமார் 8 சதவிகிதம் பேர் இப்போது பணிநிக்கம் செய்யப்படுகின்றனர்.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி பில் ஸ்பென்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்டிவிஷன், ப்ளிஸார்ட் மற்றும் கிங் டீம்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 2024ல் நாம் முன்னேறும் போது, மைக்ரோசாப்ட் கேமிங் மற்றும் ஆக்டிவிஷன் ப்ளிஸார்டின் தலைமையானது நிலையான செலவுக் கட்டமைப்புடன் ஒரு உத்தியையும் செயல்படுத்தும் திட்டத்தையும் சீரமைக்க உறுதிபூண்டுள்ளது. இது எங்கள் வளர்ந்து வரும் வணிகம் முழுவதையும் ஆதரிக்கும் வகையில் நாங்கள் முன்னுரிமைகளை அமைத்துள்ளோம்.
இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, எங்கள் குழுவில் உள்ள 22,000 பேரில் கேமிங் பணியாளர்களில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய வலிமிகுந்த முடிவை எடுத்துள்ளோம். இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட், எக்ஸ்பாக்ஸ் மற்றும் ஜெனிமேக்ஸ் அணிகளின் வெற்றியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். மேலும் அவர்கள் இங்கு சாதித்துள்ள அனைத்திற்கும் அவர்கள் பெருமைப்பட வேண்டும். அனைத்து படைப்பாற்றலுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உள்ளூர் வேலைவாய்ப்புச் சட்டங்களால் அறிவிக்கப்படும் பணிநீக்க பலன்கள் உட்பட, மாற்றத்தின் போது பாதிக்கப்படுபவர்களுக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம். மேலும் புறப்படும் சக ஊழியர்களை மரியாதையுடனும் இரக்கத்துடனும் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்
இது தவிர, மைக்ரோசாப்டின் கேம் உள்ளடக்கம் மற்றும் ஸ்டுடியோஸ் தலைவர் மாட் பூட்டி ஒரு அறிக்கையில், ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட் தலைவர் மைக் யபர்ரா நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் சமீபத்தில் Riot Games, Google, Discord, Twitch, Unity, eBay மற்றும் சில நிறுவனங்களிலும் பணி நீக்கத்தை அறிவித்தது. 2023ம் ஆண்டில், மைக்ரோசாப்ட் சுமார் 10,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.