அதீத மூடநம்பிக்கையால் 5 வயது குழந்தையை கங்கையில் மூழ்கடித்து கொலை செய்த பெற்றோர்!!
இந்திய தலைநகரான டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம், ஹர் கி பௌரிக்கு 5 வயது ஆண் குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் வந்தனர்.அவர்கள், தங்களது குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் குணமாகும் என்ற நம்பிக்கையில் குழந்தையை தண்ணீரில் மூழ்க வைத்தனர். அப்போது அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர், இந்த குழந்தை எழுந்து நிற்கும். இது எனது வாக்குறுதி எனக் கூறி குழந்தையை தண்ணீரில் மூழ்க வைக்கிறார். அப்போது அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்க முயன்றனர். அவர்களையும் அந்த பெண் தாக்க முயல்வது போன்று காட்சிகள் உள்ளன.
இதனிடையே, தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட குழந்தை மயக்கமடைந்தது. பின்னர், தகவலறிந்து வந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து குழந்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பொலிஸார் குழந்தையின் பெற்றோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கங்கை நீரில் மூழ்கடித்தால் நோய் குணமாகும் என்ற மூட நம்பிக்கையால் 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.