இலங்கையில் மூடப்படும் நிலையில் உள்ள 95 வைத்தியசாலைகள்!
இலங்கையில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த (8.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகும் நிலைமை தற்போது நாட்டில் காணப்படுகிறது.
விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட சுமார் 1500 வைத்தியர்கள் ஒரு வருடம் என்ற குறுகிய காலத்துக்குள் சேவையிலிருந்து விலகியுள்ளனர். இது நாட்டிலுள்ள மொத்த வைத்தியர்களில் நூற்றுக்கு 5 சதவீதமாகும். 2022இல் காணப்பட்ட மொத்த வைத்தியர்களில் 5 சதவீதமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
சேவை வழங்கிக்கொண்டிருக்கும் ஓரிரு வைத்தியர்களும் இவ்வாறு வெளியேறிவிட்டால் அந்த வைத்தியசாலைகளை மூடுவதைத் தவிர மாற்று வழியில்லை. அத்தோடு 150 வைத்தியசாலைகளில் எதிர்பார்க்கும் சேவைகளைப் பெற முடியாத நிலைமை காணப்படுகிறது.
இதே போன்று மேலும் 168 வைத்தியசாலைகள் இவ்வாறு சேவைகள் முடங்கக்கூடிய நிலைமையில் காணப்படுகின்றன. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முறையான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாவிட்டால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராவோம் என எச்சரிக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.