இலங்கையில் விலை காட்சிப்படுத்தப்படாத பொருட்களை இலவசமாக கொள்வனவு செய்யுங்கள்!
இலங்கையில் பொருட்களின் விலை காட்சிப்படுத்தப்படவில்லை என்றால், அந்த பொருட்களை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின்படி விற்பனைக்கு வைக்கப்படும் ஒவ்வொரு பொருளின் விலையையும் குறிப்பிடுவது அல்லது காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை பாரியளவிலான சுற்றிவளைப்புகளையும் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதிலும் சந்தை கண்காணிப்பின் போது விலைகள் காட்சிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஈ.யு. ரஞ்சனா விற்பனைக்கான பொருட்களின் விலையை வெளியிடாதது தொடர்பாக ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் இன்னும் சந்தை கண்காணிப்பில் இது வெற்றிகரமாக நிறைவேற்றப்படவில்லை என்றும் இதன்காரணமாக விலை காட்சிப்படுத்தப்படாத பொருட்களை இலவசமாக பெறுங்கள் என்ற திட்டத்தை சமூகமயமாக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் விற்பனைக்கு வரும் ஒவ்வொரு பொருளிலும் விலை காட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்த அவர் அதுதான் எங்களின் இலக்கு என்றும் கூறியுள்ளார்.