WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
WhatsApp பயனர்களுக்கான ஒரு அட்டகாசமான அம்சத்தை பீட்டா வெர்ஷனில் தற்போது WhatsApp அறிமுகம் செய்து சோதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் பீட்டா திட்டத்தின் மூலம் ஒரு புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட், பலர் எதிர்பார்த்துக் காத்திருந்த முற்றிலும் புதுமையான அம்சமாகும். அதுதான் ‘அனிமேஷன் அவதார்’ அம்சம். இது ஏற்கனவே வாட்ஸ் அப் நிறுவனத்தால் சோதிக்கப்பட்டு வந்த நிலையில், பீட்டா வெர்சனில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த இப்போது கிடைக்கிறது.
அனிமேஷன் அவதார் என்பது 3D வடிவில் காட்சியளிக்கும் பொம்மைகளாகும். பார்ப்பதற்கு ஒரு உண்மையான நபர் போலவே அவை இருக்கும் என்பதால், சேட் செய்யும்போது அவற்றைப் பயன்படுத்தி உங்களின் அரட்டையை சுவாரசியமாக்கலாம்.
இது உங்களுடைய கணக்கிற்கு வந்துள்ளதா என்பதை சரிபார்க்க, முதலில் உங்கள் WhatsApp கணக்கை அப்டேட் செய்துவிட்டு, சேட் பக்கத்திற்கு சென்று அவதார் டேப் விருப்பத்தைத் திறந்து பார்த்தால், அதில் சில அவதார் பொம்மைகளுக்கு அனிமேஷன் இருந்தால், உங்களுக்கும் அந்த புதிய அம்சம் கிடைத்துவிட்டது என அர்த்தம். இப்போது நீங்கள் அந்த அனிமேஷன் அவதார்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழலாம்.
இதில் சிறப்பு என்னவென்றால், முன்பெல்லாம் ஒரு சாதனத்திற்கு அப்டேட் வந்துள்ளதென்றால், அதில் உள்ள அவதாரர்களைப் பிறருக்கு அனுப்பும்போது மற்றொரு நபரின் சாதனம் அப்டேட் ஆகவில்லை என்றால் அவர்களுக்கு அது காட்டாது. ஆனால் இந்த புதிய அம்சம் எதிர்முனையில் இருக்கும் நபர் தன் சாதனத்தை அப்டேட் செய்யவில்லை என்றாலும், என்ன அவதார் அனுப்பி இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியும்.
தற்போது கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று தன் WhatsApp பீட்டாவை அப்டேட் செய்த சிலருக்கு மட்டுமே இந்த அனிமேஷன் அவதார்கள் கிடைக்கிறது. இனிவரும் வாரங்களில் இது அனைவருக்குமே கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் வெறும் மெசேஜ் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ் அப் தளம், தற்போது உலக அளவில் பல மில்லியன் கணக்கானப் பயனாளர்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் செயலியாக மாறி இருக்கிறது.