காயம் காரணமாக நாடு திரும்புகிறார் துஷ்மந்த சமீர
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
அவர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் தொடரில் இருந்து விலகியுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
துஷ்மந்த சமீர உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் ஆரம்பச் சுற்றுகளில் சேர்க்கப்படவில்லை எனினும், சுப்பர் சிக்ஸர் சுற்றின் போது அவரை மீண்டும் அணியில் சேர்க்க கிரிக்கெட் தெரிவுக் குழு தயாராக இருந்தது.
எவ்வாறாயினும், காயம் முழுமையாக குணமடையாததால் சமீரா எஞ்சிய தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, துஷ்மந்த சமீர நாடு திரும்புவார் என்றும் அதற்கு பதிலாக தற்போது ஜிம்பாப்வேயில் இருக்கும் மற்ற 3 வீரர்களில் ஒருவர் இலங்கை அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கையின் முதல் போட்டி நாளை (30) நெதர்லாந்து அணியுடனும், இரண்டாவது போட்டி ஜூலை 02 ஆம் திகதி ஜிம்பாப்வேயுடனும், மூன்றாவது போட்டி ஜூலை 7 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுடனும் நடைபெறவுள்ளது.
இலங்கை அணிக்காக துஷ்மந்த சமீர 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.