நாடு கடத்தப்படவுள்ளவர்களை தங்க வைப்பதற்கு இடம் தேடும் ட்ரம்ப் நிர்வாகம்!
அமெரிக்கா முழுவதும் குறைந்தது ஏழு பெரிய அளவிலான கிடங்குகளை கையகப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
குடியேற்ற முறையை ஒழுங்கமைக்கும் வகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோருக்கான தங்குமிட வசதிகளை உருவாக்க இந்த கிடங்குகளை பயன்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வொஷிங்டன் போஸ்ட்டால் (Washington Post) பெறப்பட்ட வரைவு கோரிக்கை திட்டத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை, 5,000 முதல் 10,000 பேர் வரை தங்கக்கூடிய குறைந்தது ஏழு பெரிய தொழில்துறை கிடங்குகளை கையகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் ஏராளமான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த முற்படுவதால், தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை தங்க வைப்பதற்கு போதுமான இடங்களை கண்டுப்பிடிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறது.
குடியேற்ற மையங்கள் இடப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. நவம்பர் மாதம் வரை சுமார் 67,000 பேர் தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிக்கலை நிவர்த்தி செய்வதற்காக மேற்படி தடுப்பு முகாம்களை உருவாக்கும் முயற்சியில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





