மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்ற கிளிநொச்சி பெண்ணை காணவில்லை
																																		மத்திய கிழக்கு நாட்டிற்கு வீட்டுப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார்.
பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே மத்திய கிழக்கு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் அவரது கணவர் தெரிவிக்கையில்,
“கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுப்பணிக்காக மனைவி மத்திய கிழக்கிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து கடந்த இரண்டு மாதங்களாக பணம் அனுப்பியிருந்தார். இந்த மாதம் சம்பளம் அனுப்பவில்லை.
அதனையடுத்து மனைவியுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போது, தொடர்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் பணிக்காகச் சென்றிருந்த வீட்டு உரிமையாளருக்கு தொடர்பை ஏற்படுத்தி விசாரித்த போது, அவர் தப்பி சென்று விட்டார் என வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
வீட்டு உரிமையாளரான பெண், எனது மனைவி, வீட்டின் முன்பக்க வாயிலாலேயே தப்பிச் சென்றார் என தெரிவிக்கிறார். அவரது கணவன் வீட்டு மாடியிலிருந்த ஏணியால் தப்பிச் சென்றுள்ளார் என தெரிவித்தார். அவர்களின் முரண்பாடான பதிலாலேயே எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மனைவி காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடும் போது, பணிக்கு சென்றுள்ள வீட்டு உரிமையாளர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனது தொலைபேசி மற்றும் கடவுச்சீட்டு என்பவற்றை பறித்து வைத்துள்ளதாகவும் அதனைத் தருமாறு கேட்டு முரண்பட்டதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
அந்நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் மனைவியுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை. அதனையடுத்து வீட்டு உரிமையாளர்களுடன் அரபு மொழியில் உரையாடிய போதே, மனைவி காணாமல் போயுள்ளதாக தெரிவித்தார்.
எனது மனைவி தற்போது உயிருடன் இருக்கின்றாரா? அல்லது இல்லையா ? வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு இறந்து விட்டாரா ? என பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.
யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த போது, இவ்வாறு வீட்டுப் பணிக்காக செல்வோர் 2 வருடங்களைக் கடந்திருந்தால் மட்டுமே நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் பணிக்காக அனுப்பிய முகவர்களே அதற்கு பொறுப்பு எனத் தெரிவித்துள்ளனர்.
எனவே அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டின் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடனடி நடவடிக்க மேற்கொண்டு எனது மனைவியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
        



                        
                            
