குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா!
வடகொரியா இன்று கிழக்கு கடற்பகுதியை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
வொஷிங்டன் (Washington) மற்றும் சியோலுடனான (Seoul) பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், பியோங்யாங் ( Pyongyang ) தனது சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
குறித்த ஏவுகணை சுமார் 700 கிலோமீட்டர் (434 மைல்) தூரம் பறந்து சென்றதாக தென்கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வட கொரியாவின் ஏவுகணை தயாரிப்புகளை முன்கூட்டியே கண்காணித்ததாகவும், இப்போது சோதனையின் விவரங்களை பகுப்பாய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவின் இராணுவம் கூடுதல் வட கொரிய ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிராக கண்காணிப்பையும் விழிப்புணர்வையும் வலுப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஏவுகணை நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள நீரில் விழுந்ததாக நம்பப்படுகிறது, மேலும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் வடகொரியா இந்த ஏவுதலை உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





