சூடானின் முன்னாள் போராளித் தலைவரை குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
20 ஆண்டுகளுக்கு முன்பு டார்பரின் (Darfur) மேற்குப் பகுதியில் தாக்குதல்களை நடத்தியதற்காக சூடான் போராளிக் குழுவின் தளபதியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) குற்றவாளி என கண்டறிந்துள்ளது.
அலி குஷாயப் என்றும் அழைக்கப்படும் அலி முஹம்மது அலி அப்துல்-ரஹ்மான், ஆகஸ்ட் 2003 முதல் மார்ச் 2004 வரை கொலை, பாலியல் வன்கொடுமை, சித்திரவதை, கட்டாய இடமாற்றம் உள்ளிட்ட பல போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஹேக்கை தளமாகக் கொண்ட நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளார்.
ஜன்ஜாவீத் என்று அழைக்கப்படும் அரசாங்க ஆதரவு பெற்ற போராளிக் குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சூடானின் டார்பர் பிராந்தியத்தில் நடந்த அட்டூழியங்கள் தொடர்பாக ICC நீதிபதிகளால் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பாகும்.
“குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என்று சபை உறுதியாக நம்புகிறது” என்று ICC தலைமை நீதிபதி ஜோனா கோர்னர் குறிப்பிட்டுள்ளார்.
அப்துல்-அல்-ரஹ்மானுக்கு பின்னர் ஒரு திகதியில் தண்டனை அறிவிக்கப்படும் என்று ஜோனா கோர்னர் தெரிவித்துள்ளார். அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





