இந்தோனேசிய உறைவிடப் பாடசாலை விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் உறைவிடப் பாடசாலைக் கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு ஜாவா மாகாணத்தில் மாணவர்கள் மதிய தொழுகைக்காக ஒன்றுகூடியபோது பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளதாக பிராந்திய மீட்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை(05) தெரிவித்தனர்.
கிழக்கு ஜாவா தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் நானாங் சிகிட், இடிபாடுகளுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் புதைந்துள்ளதால், மீட்புப் பணிகள் சவாலானதாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் சுமார் 25 பேர் காணாமல் போயுள்ளனர், மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சிடோர்ஜோ மாவட்டத்தில் உள்ள பல மாடி அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பாடசாலையின் ஒரு பகுதி கடந்த திங்கள்கிழமை அங்கீகரிக்கப்படாத புதுப்பித்தல் நடவடிக்கையின் போது இடிந்து விழுந்ததில் டஜன் கணக்கான மாணவர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர்.