டெல்லியில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் ஐவர் கைது ; கைப்பற்றப்பட்டட ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்

பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஐந்து தீவிரவாதிகளைப் புதுடெல்லி பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மத்தியப் புலனாய்வுத் துறையிடமிருந்து பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகப் புதுடெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதுடெல்லி பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
செப்டம்பர் 9ஆம் திகதி இரவு மும்பையிலிருந்து புதுடெல்லி வந்திறங்கிய அபு பக்கர், அஃதாப் ஆகிய இரு நபர்களை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தியது.அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலைக் கொண்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த அஷ்ரஃப் டேனிஷ் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதான ஆசார் டேனிஷ் என்பவர் பாகிஸ்தானில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.அவரிடமிருந்து கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள், ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனங்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, ஹைதராபாத், மும்பை, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதுடெல்லி பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சந்தேகத்தின் பேரில் எட்டுப் பேரிடம் நடத்திய விசாரணையில், போபால், ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
அவர்கள், இந்தியாவில் வகுப்புவாத வெறுப்பை பரப்பி, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பல்வேறு இணையத்தளக் குழுக்களை நடத்தி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.பயங்கரவாத இயக்கத்தில் இணையும் இளையர்களுக்கு வெடிகுண்டு போன்ற ஆயுதங்களைத் தயாரிக்கப் பயிற்சிகளையும் டேனிஷ் வழங்கியதாகக் கூறப்பட்டது.
அந்த ஐவரைக் கைது செய்ததன் மூலம், இந்தியாவில் நடத்தப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.இந்தக் கும்பலுக்குத் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் புதுடெல்லி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.