நான் விளையாடாவிட்டாலும் எப்போதும் சிஎஸ்கே தான்… தோனி அறிவிப்பு

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக தோனி தொடர்ச்சியாக விளையாடி கொண்டு வருகிறார்.
சென்னை அணி தடைசெய்யப்பட்ட காரணத்தால் மட்டும் தான் அவர் இரண்டு ஆண்டுகள் புனே அணிக்காக விளையாடினார். மற்றபடி அவர் சென்னையை விட்டு விலகி இதுவரை வேறு அணிக்காக விளையாடாமல் சென்னைக்காக மட்டுமே தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டு இருக்கிறார். இதற்கு முன் கேப்டனாக விளையாடி கொண்டிருந்த அவர் இப்போது கேப்டனாக இல்லாமல் கூட வீரராக விளையாடி கொண்டு வருகிறார்.
இதன் மூலமே அவருக்கும் சென்னை அணிக்கு இடையே எவ்வளவு அன்பு இருக்கிறது என்பது தெரிகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்க கலந்து கொண்ட தோனி “எப்போதும் சென்னை அணிக்காக தான் விளையாடுவேன்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” “நானும் சிஎஸ்கே-வும் எப்போதுமே ஒன்றாக இருக்கிறோம். இன்னும் அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு கூட (ரசிகர்கள் ஆரவாரம்) இருக்கும் என நம்புகிறேன். நான் இன்னும் 15-20 ஆண்டுகள் ஆடுவேன் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், நான் விளையாடவில்லை என்றாலும் கூட சென்னை அணிக்கு ஆதரவு இருக்கும்” எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் சிஎஸ்கே-வின் முக்கிய அங்கமாக இருக்கும் தோனி, அணியுடனான தனது பயணம் விளையாட்டு நாட்களை தாண்டியும் தொடரும் என்று உறுதியளித்தார். இது பற்றி அவர் பேசுகையில் “சென்னை அணியுடன் இது ஒரு வருடம் அல்லது இரண்டு வருட பயணம் இல்லை. நான் எப்போதும் மஞ்சள் ஜெர்சியில் இருப்பேன். நான் விளையாடுவேனா இல்லையா என்பது பிறகு தெரியும்,” என்று அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து மற்றொரு நிகழ்ச்சியில், சிஎஸ்கே-வின் மோசமான செயல்பாடு குறித்து பேசிய தோனி, “கடந்த இரண்டு ஆண்டுகள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. நாங்கள் எங்கள் தரத்திற்கு ஏற்ப ஆடவில்லை. ஆனால், முக்கியமானது என்னவென்றால், தோல்வியிலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டோம் . கடந்த ஆண்டும் இதே கேள்வி எழுந்தது தவறுகள் நடப்பது சாதாரண விஷயம் அதில் இருந்து சரி செய்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப தான் முயற்சி செய்யவேண்டும்” என கூறினார்.
அதன்பின், “நான் விளையாடாவிட்டாலும், சிஎஸ்கே-வுடன் இருப்பேன்,” எனவும் உறுதியளித்தார். இதன் மூலம் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட அடுத்ததாக சென்னை நிர்வாகம் அவருக்கு பயிற்சியாளர், ஆலோசகர், அல்லது நிர்வாகப் பொறுப்பு கொடுக்கலாம் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது.