கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு – தொழிலாளர்களை இணைப்பதற்கு அனுமதி

கொரிய குடியரசின் E-08 வீசா திட்டத்தில் இலங்கை பருவகால தொழிலாளர்களை இணைப்பதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், இதற்குத் தேவையான முன்னோடி கருத்தாக்கத்தினை செயல்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டிய கொரியாவின் உள்ளுராட்சி அமைப்புகளுடன் கலந்துரையாடுவதற்கும் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக, இலங்கை தொழிலாளர்களை குறுகிய கால பருவத்தில் (அதிகபட்சம் 8 மாதங்கள்) விவசாயக் கிராமங்களில் பணியாற்ற அனுமதிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஊடாக, இலங்கை பருவகால தொழிலாளர்களுக்கு போசோங்க் பிராந்தியத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டும் வாய்ப்பைப் பெறுவதோடு, நாட்டிற்கும் வெளிநாட்டு செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான நல்ல வாய்ப்பு ஏற்படுகிறது.
இதனை முன்னிட்டு, இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையின் அடிப்படையில், போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.