பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் உறவு வேண்டாம் – கங்குலி ஆவேசம்

பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதனால், பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் ரீதியிலான உறவுகளை இந்திய கிரிக்கெட் அணி முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும். அது ஐசிசி தொடர்கள் என்றாலும் சரி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான கங்குலி, தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
“பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் ரீதியான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும். நூறு சதவிதம் இதை செய்ய வேண்டும். இது மாதிரியான கடுமையான நடவடிக்கை அவசியம் தேவை. ஆண்டுதோறும் இதுமாதிரியான தாக்குதல் நடக்கிறது. தீவிரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. அப்படி செய்யவும் கூடாது. நாம் பாதிக்கப்பட்டவர்கள். நாம் தான் அதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். நமது அரசு சொல்வதை நாம் செய்வோம்.
அரசின் நிலைபாடு காரணமாக பாகிஸ்தான் உடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் நாம் விளையாடுவது இல்லை. வரும் நாட்களிலும் அது நடக்காது. ஆனால், ஐசிசி உடனான உடன்படிக்கை காரணமாக இந்தியா, ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் உடன் விளையாடுகிறது. ஐசிசிக்கு இங்கு என்ன நடக்கிறது என தெரியும்” என கங்குலி தெரிவித்துள்ளார்.