இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
இலங்கையர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று வெப்பச் சுட்டெண் கணிசமான மட்டத்தில் அதிகரிக்கக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதாலும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் சோர்வு ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
நீரிழப்பு மற்றும் உமிழ்நீர் இழப்பு காரணமாக, தசைப்பிடிப்பு போன்ற நிலைமைகளும் ஏற்படலாம், அதற்கேற்ப, போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நிழலான இடங்களில் இருக்குமாறும் அந்தத் திணைக்களம் மக்களை அறிவுறுத்துகிறது.
வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும், வாகனங்களில் குழந்தைகளை தனிமையில் அமர வைக்க வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது.
நிலவும் வெப்பத்தை கருத்திற்கொண்டு, மக்கள் கடினமான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை பயன்படுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம், மொனராகலை மாவட்டத்தில், 35.4 பாகை செல்ஸியஸ் என்ற அளவில், அதியுச்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில், 11.2 பாகை செல்ஸியஸ் என்ற அளவில் குறைந்தப்பட்ச வெப்பநிலை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.