வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 87 பேர் பலி
காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், பாலஸ்தீனத்தின் வடக்கே பெய்ட் லாஹியா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு பகுதி ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து ஏராளமானோர் இடிபாடுகளுக்கு அடியில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகளை சரிபார்த்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, ஆனால் ஹமாஸ் வெளியிட்ட முந்தைய புள்ளிவிவரங்கள் “மிகைப்படுத்தப்பட்டவை” என்று தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர், “காசாவில் பயங்கரமான கனவு தீவிரமடைந்து வருகிறது” என்றும் போர் “இப்போது நிறுத்தப்பட வேண்டும்” என்றும் எச்சரித்தார்.
ஒரு அறிக்கையில், பொதுமக்கள் மீது தொடரும் தாக்குதல்களைக் கண்டிப்பதாகக் ஐ.நா.வின் அமைதி செயல்முறை ஒருங்கிணைப்பாளர் டோர் வென்னஸ்லேண்ட் தெரிவித்துள்ளார்.
“இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும், ஹமாஸ் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பாலஸ்தீனியர்களின் இடம்பெயர்வு நிறுத்தப்பட வேண்டும், பொதுமக்கள் எங்கிருந்தாலும் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.