இலங்கையில் இணையவழி மோசடி: அண்மைய கைதுகளுக்கு சீனா பதில்
இலங்கையுடன் மோசடி தடுப்பு சட்ட அமலாக்க ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீனா எதிர்பார்த்துள்ளது என கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அறிக்கையில், ”சீனப் பிரஜைகள் உட்பட பல வெளிநாட்டு சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்ததாக அண்மையில் வெளியான செய்திகளை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
இந்த வழக்குகள் நமது இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமின்றி, சீனாவின் இமேஜையும் கடுமையாக சேதப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய நட்புறவை பாதிக்கிறது.
சட்டத்திற்கு உட்பட்டு அவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் சந்தேக நபர்களை உறுதியுடன் ஒடுக்குவதில் இலங்கை சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்களுக்கு சீனத் தூதரகம் முழு ஆதரவையும் வழங்குகிறது.
உலகமயமாக்கல் காலத்தில், எந்த நாடும் தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியாது. சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவைக் கொண்டிருக்கின்றன. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மிக நெருக்கமாக உள்ளது. நமது இரு நாட்டு மக்களுக்கும் நன்மைகளை கொண்டு வருவதற்கு நமது இரு நாடுகளும் எப்போதும் பரஸ்பரம் ஆதரவு அளித்து வருகின்றன.
இலங்கையுடனான சட்ட அமலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இந்தப் பிரச்சனையை கூட்டாகக் கையாள்வதற்கு விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும் சீனா தயாராக உள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள், குறிப்பாக பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்களிடமிருந்து புரிந்துணர்வையும் ஆதரவையும் பெற சீனா நம்புகிறது”.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.