வடகொரிய குப்பை பலூன்கள் சிலவற்றில் GPS கருவிகள்

தென்கொரியா அதன் எல்லையைத் தாண்டி வந்த வடகொரியாவின் பலூன்கள் சிலவற்றில் GPS கருவிகளைக் கண்டுபிடித்துள்ளதாக ‘யோன்ஹாப்’ செய்தி நிறுவனம் அக்டோபர் 13ஆம் திகதி தெரிவித்தது.
குப்பைகளைக் கொட்டவும் தரவுகளைத் திரட்டவும் பியோங்யாங் எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளை மேலும் நுணுக்கமாகச் செய்திட இத்தகைய வழிமுறைகளைக் கையாண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தென்கொரிய ஆர்வலர்கள் செய்ததற்குப் பதிலடியாகத் தானும் செய்வதாகக் கூறி, வடகொரியா கடந்த சில மாதங்களாகத் துண்டுப்பிரசுரங்களையும் குப்பைகளையும் கொண்ட ஆயிரக்கணக்கான பலூன்களை அனுப்பி வருகிறது.
தென்கொரிய ராணுவத்தினர் கைப்பற்றிய சில பலூன்களில் GPS கருவிகள் இருந்ததாகச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.இது தொடர்பாக சோல் தலைநகரின் பாதுகாப்பு அமைச்சு உடனடியாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக, ஆளில்லா வானூர்திகளை பியோங்யாங் மீது தென்கொரியா ஏவிவிட்டதாகவும் அவற்றில் பிரசாரத் துண்டுப் பிரசுரங்கள் இருந்ததாகவும் வடகொரியா அக்டோபரில் தெரிவித்தது.
இதற்கிடையே, மேலும் ஓர் ஆளில்லா வானூர்தி பியோங்யாங்கில் கண்டுபிடிக்கப்பட்டால் ‘பயங்கரமான பேரழிவு’ ஒன்றைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் அதிகாரபூர்வ ஊடகம்வழி எச்சரித்தார்.