இலங்கையின் பல பகுதிகளில் 200mm மழைவீழ்ச்சி பதிவு : வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!
இலங்கையில் இன்று (11) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பிரதேசத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
239 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அல்பிட்டியில் 194.75 மி.மீ, புலத்சிங்கள 187 மி.மீ, மத்துகம 186.5 மி.மீ, சீதாவக பிரதேசத்தில் 184.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தற்போது பெய்து வரும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் இன்று (11) காலை 5.30 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 150க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தற்போதைய மழை நிலைமை காரணமாக கொழும்பு அவிசாவளை ஹைலெவல் வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
2ஆம் கட்டத்தின் கீழ் காலி, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும், பதுளை, கொழும்பு, கம்பஹா, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 01ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை, சிறிய வெள்ளம் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பன்ன இன்டர்சேஞ்சை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிப்பன்ன இன்டர்சேஞ்சின் வெளியேறும் மற்றும் நுழைவு வீதிகள் தற்போது முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.