உத்தரபிரதேசத்தில் டிராக்டர் மற்றும் டிரக் மோதி விபத்து – 10 தொழிலாளர்கள் பலி
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டரும் டிரக்கும் மோதிய விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கச்வா எல்லை அருகே நடந்த இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
டிராக்டர் 13 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஒரு டிரக் கட்டுப்பாட்டை இழந்து பின்னால் இருந்து மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
“கச்வா எல்லையில், ஜிடி சாலையில் விபத்து நடந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. 13 பேருடன் வாரணாசி நோக்கிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியது. 13 பேரில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்” என்று மிர்சாபூர் காவல்துறை கண்காணிப்பாளர் அபிநந்தன் குமார் சிங் குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழக அதிர்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதோஹி மாவட்டத்தில் 13 தினசரி கூலித் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வாரணாசியில் உள்ள தங்கள் கிராமமான மிர்ஜாமுராத் நோக்கிச் சென்றனர் என்று அதிகாரி தெரிவித்தார்.
இது ஒரு வேதனையான சம்பவம் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், “இதனுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.