இந்தோனேசியாவில் மெத்தைக்கு அடியில் கிடைத்த புதையல் – ஆச்சரியத்தில் குடும்பத்தினர்
இந்தோனேசியாவில் பல்லாண்டுகளாகத் தமது மெத்தைக்கு அடியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
74 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு பணத்தை சேமித்து வைத்துள்ளார். அண்மையில் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால் இத்தனை ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருந்த ரகசியத்தை அவர் அம்பலப்படுத்தினார்.
உறவினர்கள், அண்டை வீட்டார் என 20க்கும் அதிகமானோர் மெத்தைக்கு அடியில் இருந்த பணத்தை எண்ண உதவியதாக இந்தோனேசிய ஊடகம் தெரிவித்தது.
நள்ளிரவு ஒரு மணி வரை விழித்திருந்து அவர்கள் பணத்தை எண்ணியுள்ளனர். சில பண நோட்டுகள் சேதமடைந்திருந்தன.
சுமார் 10 மில்லியன் ருப்பியா செல்லுபடியாகாத நோட்டுகளும் இருந்தன. பயன்படுத்தக் கூடிய நோட்டுகளின் மொத்த மதிப்பு, 100 மில்லியன் ருப்பியாவுக்கும் அதிகமாகும். முதியவர் வாத்துகளை வளர்த்துப் பணம் சேமித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முதியவரின் மருத்துவச் செலவுக்கும் வீட்டைப் புதுப்பிக்கவும் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தப் போவதாக அவரின் குடும்பம் கூறியது.