சீனக் குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்கத் தடை விதித்துள்ள அரசாங்கம்
தங்கள் நாட்டுக் குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்கச் சீனா தடை விதித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைத் தத்துக்கொடுப்பதற்காகச் சீனா வெளிநாடுகளுக்கு அனுப்பியது. சீனாவில் மக்கள் தொகை உயர்ந்துகொண்டே இருந்ததால் அந்நாடு ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை கொள்கையைக் கடுமையாக்கியது. இதனால், அந்நாட்டில் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால், தற்போது வெளிநாட்டினருக்குத் தங்கள் நாட்டுக் குழந்தைகளை தத்துக்கொடுக்கச் சீனா தடை விதித்துள்ளது. மேலும், இத்தடை அனைத்துலக சட்டங்களுக்கு உட்பட்டது என்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப இது உள்ளது என்றும் அந்நாட்டு அரசாங்கம் கூறியது.இதனால், சீனாவிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து, அதற்கான பணியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்கக் குடும்பங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. உடனடியாக, இத்தடையை அமல்படுத்த என்ன காரணம் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனைத்துலகத் தத்தெடுப்புகளுக்குச் சீனா தடை விதிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தத்தெடுப்பு அமைப்புகள் மூலம் இந்த வாரத் தொடக்கத்தில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என அவர்கள் கூறியதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்தது.இதற்கான அதிகாரபூர்வ அறிக்கையை அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (செப்டம்பர் 5) வெளியிட்டது.
“சீனக் குழந்தைகளைத் தத்தெடுத்த நாடுகளின் அரசாங்கத்திற்கும் எங்கள் நாட்டுக் குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பிய குடும்பங்களின் அன்பிற்கும் நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் கூறினார்.
இருப்பினும், சீனாவிலுள்ள ரத்த உறவுகளின் குழந்தைகள், கணவன் அல்லது மனைவியின் குழந்தைகள் ஆகியோரைத் தத்தெடுக்க வெளிநாட்டினருக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனக் கூறியதுடன் இந்தப் புதிய கொள்கை பற்றி சில விவரங்களையும் அவர் வழங்கினார்.