கம்பீருடனான பழைய பிரச்சினை பற்றி BCCIக்கு கோலி வழங்கிய வாக்குறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் ட்ராவிட்டின் பதவிக் காலம் நிறைவடைந்தது. தற்போது இலங்கைக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான அணிகள் அவரது தலைமையில் களமாட உள்ளன.
வருகிற 27 ஆம் திகதி முதல் தொடங்கும் டி20 தொடருக்கான இந்திய அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூரியகுமார் யாதவ் வழிநடத்த உள்ளார். அதேநேரத்தில், ஆகஸ்ட் 2 முதல் தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை வழக்கம் போல் ரோகித் சர்மா வழிநடத்த உள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இலங்கை தொடருக்கான ஒருநாள் அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற மூத்த வீரர்கள் அவசியம் இடம் பெற வேண்டும் என புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் அறிவுறுத்தி இருந்தார். டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற மூவரும் இந்த தொடரில் முதலில் ஓய்வு எடுக்க விரும்பியதாகவும், கம்பீரின் அறிவுறுத்தலுக்குப் பின்னர் ரோகித், கோலி ஆகிய இருவரும் தங்களது முடிவை மாற்றியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடனான தனது கடந்த கால கசப்பான சம்பவங்களை புறந்தள்ளிவிட்டு, அவருடன் இணைந்து செயல்பட தயார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) உறுதியளித்துள்ளார்.
“கோலி கம்பீருடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறார். இது குறித்து சம்பந்தப்பட்ட பி.சி.சி.ஐ அதிகாரிகளிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த காலங்களில் ஐ.பி.எல் போட்டிகளின் போது கேமராக்களால் படம் பிடிக்கப்பட்ட கசப்பான மோதல்களால் குறிக்கப்பட்டாலும், முந்தைய பிரச்சினைகள் அவர்களை பாதிக்காது என்று கோலி கூறியதாக நம்பப்படுகிறது. பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து, டெல்லியைச் சேர்ந்த கோலி, இருவரும் நாட்டின் நலன்களுக்காகச் செயல்படுவதை அங்கீகரிப்பதாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. முந்தைய கருத்து வேறுபாடுகளில் இருந்து முன்னோக்கி செல்லத் தயார் என்றும் கூறியுள்ளார்” என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 ஐ.பி.எல் சீசனின் போது, கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையே மைதானத்திலே உரசல் ஏற்பட்டது. நவீன் உல் ஹக் -ஆல் ஏற்பட்ட இந்த மோதலில், ஆடுகளத்திற்குள் கம்பீர் – கோலி ஆகிய இருவரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லக்னோ அணி ஆலோசராக இருந்த கம்பீர் அணியுடன் சென்ற மைதானங்கள் முழுதும் அவருக்கு எதிரான முழக்கங்கள் ஒலித்தன. ஐதராபாத்தில் கோலி ரசிகர்கள் டக்-அவுட்டில் அமர்ந்திருந்த கம்பீரை நோக்கி, கையில் கிடைத்தவற்றைக் கொண்டு எறிந்தனர். இதேபோல், நவீன் உல் ஹக் -வும் கோலி ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டார். மேலும், சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
ஆனால், இந்த ஆண்டு நடந்த தொடரின் போது கம்பீர் – கோலி – நவீன் உல் ஹக் ஆகிய மூவரும் சமரசம் செய்து கொண்டனர். இது பற்றிய பேசிய கோலி, “எனது நடத்தையால் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். நான் நவீனை கட்டிப்பிடித்தேன், மறுநாள் கவுதி பாய் (கவுதம் கம்பீர்) வந்து என்னைக் கட்டிப்பிடித்தார். உங்களுக்கான மசாலா முடிந்துவிட்டது, அதனால் நீங்கள் கொந்தளிக்கிறீர்கள். நாங்கள் இனி குழந்தைகள் இல்லை,” என்று தெரிவித்தார்.