ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு தொடர்பில் ஸ்டார்மரின் விருப்பத்தை வரவேற்ற பைடன்
ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்று பிரிட்டனின் புதிய பிரதமர் கியர் ஸ்டார்மர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதைத் தாம் வரவேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாக ஜூலை 11ஆம் திகதி பிரிட்டிஷ் அரசாங்க அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.
வெள்ளை மாளிகையில் பைடனை ஸ்டார்மர் ஜூலை 10ஆம் திகதி சந்தித்தபோது பிரிட்டிஷ், அமெரிக்க உறவு, உக்ரேன் மற்றும் காஸா நெருக்கடிகள், யூரோ 2024 அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றி ஆகியவை குறித்துப் பேசினர்.
“உலகெங்கும் உருவெடுக்கும் சவால்களைச் சந்திக்கும் காலத்தில், ஒன்றிணைந்து செயல்படும்போது நாம் அதிக வலிமை பெறுவோம் என்பதே அவர்களின் ஒருமித்த கருத்து,” என்று அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
நேட்டோ உச்சநிலை மாநாட்டுக்காக வாஷிங்டன் சென்றிருக்கும் ஸ்டார்மர், ஜெர்மனியின் ஓலாஃப் ஷோல்ஸ் உள்பட பல ஐரோப்பியத் தலைவர்களைச் சந்தித்தார்.
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை பிரிட்டன் மீண்டும் பழையநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஸ்டார்மர் கூறினார். குறிப்பாக, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை அல்லது சுங்கச்சாவடி ஒன்றியத்தில் மீண்டும் இணைந்துகொள்ளும் திட்டம் இல்லை என்று ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.