தைவானில் அமைதி நிலவினால் உலகம் முழுவதும் பலனடையும்; அதிபர் லாய்
தைவான் நீரிணையில் ஏற்படும் அமைதி ஒட்டுமொத்த உலகிற்கே பலனளிக்கும் என்று தைவான் அதிபர் லாய் சிங்-டே தெரிவித்து உள்ளார்.
தைவானில் அமைதி காணப்படாவிட்டால் வளமும் பாதுகாப்பும் சாத்தியமில்லை என்பதை அனைத்துலக சமூகம் நம்புவதாகவும் அவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) கூறினார்.
தைவானை தனது ஆட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி என்று கூறி வரும் சீனா அதிபர் லாய்க்கு எதிராக அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது.
அவர் ஒரு பிரிவினைவாதி என்று சாடி வரும் சீனா, மே மாதம் அவர் அதிபராகப் பதவி ஏற்ற பின்னர் தைவான் தீவைச் சுற்றிலும் இரண்டு நாள்கள் போர்ப் பயிற்சியை நடத்தியது.
மிகப்பெரிய அனைத்துலக வர்த்தகக் கடல்வழியான குறுகிய நீரிணையில் சீனா கடந்த நான்கு ஆண்டுகளாக தனது நடவடிக்கைகளை அதிகரித்து வந்துள்ளது.
அத்துடன், தைவானைச் சுற்றிலும் போர் விமானங்களைப் பறக்கவிடுவதுடன் போர்க் கப்பல்களையும் அடிக்கடி செலுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய தைவானிய நகரான தைச்சுங்கில் உள்ள ராணுவத் தளத்தில் வெள்ளிக்கிழமை புதிய ராணுவ அதிகாரிகள் மத்தியில் அதிபர் லாய் உரையாற்றினார்.
ராணுவ வீரர்களின் ஒவ்வொரு துளி வியர்வையும் தைவானின் பாதுகாப்புக்காகப் பாடுபட வேண்டும் என்று அப்போது அவர் கூறினார்.