எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்களை பகிரங்கப்படுத்த வேண்டும்!
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தரப்பினரிடமிருந்து 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர் யார் என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
எதுல்கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கிடைக்க வேண்டிய நஷ்ட ஈட்டை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவம் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து ஒட்டுமொத்த கடல் வளத்தையும் தாக்கியுள்ளது. இந்த விடயத்தை வைத்தும் இலஞ்சம் பெறுவது முற்றிலும் வெறுக்கத்தக்கது. இலஞ்சம் பெற்றது யார் என்பதை பாராளுமன்றத்தின் ஊடாக நீதியமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.