இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலி!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சனிக்கிழமை பெய்த அதிகபட்ச மழையால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி பொதுமக்கள் பலர் தங்களின் உயிரையும், உடைமைகளையும் இழந்துள்ளனர்.
முக்கியமாக, கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் பலர் வீடுகளை இழந்தனர். சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களையும், காணாமல் போனவர்களையும் மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
84 குடியிருப்புகளும் 16 பாலங்களும் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த கனரக உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடுவதற்கும் மக்களைத் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் மீட்புக் குழுவினரும் அதிகாரிகளும் ரப்பர் படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.