கட்டுநாயக்க விமான நிலைய விசா விவகாரம் குறித்து அரசாங்கம் விளக்கம்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு On-Arival முறையின் கீழ் விசா வழங்கும் நடவடிக்கை அமைச்சரவை அங்கீகாரத்துடன் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11, 2023 அன்று, பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி, கொள்வனவு முறையின் கீழ் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பொருத்தமான நிறுவனத்திடம் இந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.
மேலும், VFS Global என்பது 151 நாடுகளில் உள்ள 3388 விசா வழங்கும் மையங்களில் சேவைகளை வழங்கும் உலகப் புகழ் பெற்ற நிறுவனமாகும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
On-Arival முறையின் கீழ் விமான நிலையத்தில் விசா வழங்குவது இதுவரை குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
எவ்வாறாயினும், விசா வழங்குவதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு VFS Global நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா பெறுவதற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
ஏற்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனியார் நிறுவன அதிகாரிகள் இந்த சேவையில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் குடிவரவு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், விசா வழங்கும் செயல்முறையை ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவது பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது.
இதன்படி, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகள் முழுமையாக வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித அடிப்படையும் இல்லை என அரசாங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விசா வழங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணி மட்டும் இந்த நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.