அயர்லாந்தில் தற்காலிக முகாமில் வசித்து வந்த 285 புகலிடக் கோரிக்கையாளர்கள் இடமாற்றம்
அயர்லாந்து-டப்ளினில் கூடாரங்களில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் இரண்டு தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் பல மாதங்களாக மவுண்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள சர்வதேச பாதுகாப்பு அலுவலகத்திற்கு வெளியே தற்காலிக முகாம் ஒன்றில் வசித்து வந்தனர்.
285 விண்ணப்பதாரர்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டதாக அயர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முகாம் அகற்றப்பட்டுவிட்டதாகவும், புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரும் இப்போது சிட்டிவெஸ்ட் மற்றும் க்ரூக்ஸ்லிங் கவுண்டி டப்ளின் தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அயர்லாந்து அரசாங்கம் தெரிவித்தது.
மொத்தம் 186 விண்ணப்பதாரர்கள் சிட்டிவெஸ்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மேலும் 99 பேர் க்ரூக்ஸ்லிங்கில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் முகாமிடப்பட்டிருந்த அப்பகுதியில் உள்ள தெருக்கள் மாநகர சபையால் சுத்தப்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையை குழந்தைகள், சமத்துவம், ஊனமுற்றோர், ஒருங்கிணைப்பு மற்றும் இளைஞர்கள் துறை, நீதித்துறை, கார்டே (ஐரிஷ் போலீஸ்), டப்ளின் நகர சபை, பொதுப்பணி அலுவலகம் ஒன்றிணைந்து மேற்கொண்டன.
செயின்ட் பாட்ரிக்ஸ் டே வங்கி விடுமுறை வார இறுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களை குரூக்ஸ்லிங் தளத்திற்கு நகர்த்துவதற்கு அரசாங்கம் முன்பு முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.