உளவு பார்த்த இருவரால் சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மோதல்?
சீனாவுக்காக உளவு பார்த்ததாக இருவர் மீது பிரித்தானிய பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியதாகக் கூறப்படும் ஒருவர் உட்பட இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் 32 மற்றும் 29 வயதுடைய இருவர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறி சீனாவுக்கு பாதகமான தகவல்களை வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மிகவும் சிக்கலானவை என்று பெருநகர பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளை தலைவர் கமாண்டர் டொமினிக் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பிரித்தானிய உளவுத்துறை தகவலை சீனா திருட முயற்சிப்பதாக கூறப்படுவது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என பிரித்தானியாவிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், சீனாவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என்றும் சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீனாவின் உளவு நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் கவலை மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.